கடவுளாயுள்ள உலகத்தத்துவம்
எங்கும் பூரணமான இருட்டில் சூனியத்தில் ஒன்றுமில்லாது ஓர் அணுவாயிருந்த கடவுள் என்ற அனாதியாயுள்ள ஆதி, நான் என்ற துணிகரமாகி வியாபகத்தில் நினைப்பாகி வேகத்தில் சப்தமாகி, உருவத்தில் நெருப்பாகி என்றென்றைக்கும் குறைந்திடாப் பெருக்கம் கொண்ட அந்நெருப்பின் பொறிகளே அணுக்களாகி எங்கும் நிறைந்த இருட்டில் அவ்வணுக்களே வேகமாக பரவி அவ்வேகங்குறைந்ததும், ஆங்காங்கு அவவணுக்களின் இயல்பால் ஒன்றுசேர்ந்து அச்சேர்க்கையால் சுழலுதல், விலகுதல், உருளுதல், புரளுதல் அடங்கிய இழுக்குஞ்சக்தியுள்ள நட்சத்திர கிரக பூமிகளாகி அணுக்களே அணுக்களுக்கு வாகனமும் உணவுமாகி, அதனால் உயிர்களின் வளர்தல், நகர்தல், நடை, ஓட்டம் யாவுமாகி தாவரம் மற்ற உருவங்கள் உட்பட ஊற்றுணர்ச்சியும், தோற்றமும் உள்ள சீவராசிகளாகி, மனிதர்களாகி சுவை, நோவு, இன்பம் இவைகளில் சூக்குமமாகி, அம்மனிதர்களின் அனேக காரியங்களால் உள்ள தொழில் அனுபவகாரணத்தால் பேச்சாலும், நுண்ணறிவாலும், அறிவு உயர்வாகி அதனால் பக்தியோக ஆராய்ச்சிகளாகி, முடிவில் தன்னைத்தான் அறிந்து, இவைகள் யாவும் தன் வேறுபாடுடைய பரிணாம வேகவிளைவாக இருப்பதை விளக்கமாக அறிந்துகொள்வதே ஞானமாகும். இதுவே பிரபஞ்சத் தத்துவம்.
எப்பொருளையும் எடுத்து ஆராய்ந்தீர்களானால், இருள், துணிவு, நினைவு, ஓசை, ஒளி, அணுக்கள் இவை யாவும் பிரிக்கமுடியாது ஒன்று சேர்ந்து இருப்பதை அறியலாம். இதை அறியாதபோது கடவுள் ஒருவன் தனியாக இருக்கின்றான் என்று தேடவும் சொல்லவும் வேண்டியதாக இருந்தது.
கடவுளின் பெரியஅம்சம் - 9
- நான் என்ற துணிவு
- நினைப்பு அல்லது வியாபகம்
- வேகமாகிய நாதசப்தம்
- நெருப்பு அல்லது சோதி
- அணுக்களாகிய வெட்டவெளியான ஆகாயம்
- நீராகிய தண்ணீர்
- மண்ணாகிய பூமி
- காற்று
- நெருப்பு
கடவுளின் சிறிய அம்சம் - 5
- தாவரம்
- நீர்வாழ்வன
- ஊர்வன
- பறப்பன
- நடப்பன
உணர்ச்சி அம்சம் - 6
- பரிசம்
- சுவை
- நாற்றம்
- கேள்வி
- பார்வை
- யூகம்