நெற்றிக்கண்

நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு "நெற்றிக்கண்" என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.

இடுப்புக்குக் கீழ்ச் சிறுநீர் துவாரத்திற்கும், மலத்துவாரத்திற்கும் இடையேயுள்ள மூலாதாரத்தில் ஊரும் விந்தாகிய குண்டலினி சக்தியை முதுகுத்தண்டு எலும்புக்குள் மிகச் சிறிய துவாரத்தின் உள்ளே கூடிப் பிடரிப் பின்புறத்திலிருந்து "நெருப்பாறு மயிர்ப்பாலம்" என்றும் ரம்பப் பற்களைப் போல் சேர்ந்துள்ள சிரசின் நடு உச்சி மண்டை ஓட்டுக்குள் உள் வழியாகக் குருவின் பரிச உணர்ச்சியிலும், நுட்ப விவேகத் திறமையாலும், குண்டலினியை எழுப்பிக் கொண்டு வந்தால் நெற்றிக்கண் திறக்கப்படுகிறது.

நெற்றிக்கண்ணைத் திறப்பதற்கு, அறிந்த ஞானாசிரியரோடு இருபது வயதிற்குமேல் அறிவோடு, விந்தும், தன் ஞாபகமும் கலந்தால்தான் முடிகிறது.இந்தக்கண் திறந்திருந்தால் அறிவிற்கு உணர்ச்சி நன்றாய்த் தெரியும். இதை வாசி [பிராணயாமம்] என்ற மூச்சுப் பயிற்சியாலும், மற்ற யோகங்களாலும் திறக்க முடியாது.

நெற்றிக்கண் திறந்தபின் பிடரிக்கண்ணிலும் உச்சிக்கண்ணிலுமுள்ள வலம்புரிச் சுற்றும் ஆறாதாரத்தின் அறிவுப் பெருக்கமும் சோம வட்டமும் நன்றாய் தெரியும். நெற்றிக் கண்ணால் பல விஷயங்களை உணர முடியும், பின் அதை அணுபோகத்தாலேயே அறிய முடியும்.

நெற்றிக்கண்ணை வணங்காதவர்கள் யாருமே இல்லை. இந்த இடத்தை வணங்குகிறோமென்று அவர்களுக்கு தெரியாமலேயே 'சலாம்' என்றும், 'வந்தனம்' என்றும், 'நமஸ்காரம்' என்றும், 'கும்பிடுகின்றேன்' என்றும் சொல்லியும் தங்கள், தங்கள் மத ஆசாரங்களுக்குத்தக்கபடி பொட்டிட்டும், விபூதி அணிந்தும், நாமம் இட்டும், தங்கள் தங்கள் கையையும், சைகைகளையும், நோக்கங்களையும் காட்டுகின்றனர். அரசாங்கத் தன்மை பிறப்பதும், தடுக்க முடியாத வீரமும், கோபமும், ஏற்படும் போது தத்தம் மூக்கு முனையைப் பார்த்தால் சாந்தம் ஏற்பட்டுவிடும்.

ஒரு மனிதனிற்கு உடம்பில் சூடு இல்லாமற் போனால் முன் சொன்னபடி நெற்றிக்கண்ணை ஞாபகத்தில் நினைத்தால் சூட்டை உற்பத்தி செய்து கொள்ளலாம். இந்த இடத்தில் பிறக்கும் சொற்கள் சமீப காலத்தில் பலித்தே தீரும். மிகப் பொல்லாதவனையும் அவன் நல்லவனாக வேண்டும் என்று அந்த இடத்திலிருந்து நினைத்தால் அவன் அப்பொழுதோ, அண்மைக் காலத்திலோ நல்லவனாகித் தீருவான் என்பது திண்ணம். ஆகையால் தான் இந்த இடத்திற்கு ஆக்கினை ஸ்தானம் என்று பெயர். ஆணவமழிவதற்கும், ஆணவம் உண்டாவதற்கும் உரிய இந்த இடத்தை நல்ல நினைவுகளுக்கு உபயோகித்துக் கொள்ளுங்கள்.

நெற்றிக்கண் பயன்கள்:

பாலகனாயிருக்கும் போது பக்தியைத் தேடவும், வாலிப காலத்தில் யோகத்தில் ஈடுபடவும், வாலிபங்கடந்து முதியவராகும் போது நாஸ்திக ஞான அறிவு விளக்கம் பெறவும், மனிதன் ம்யற்சிக்க வேண்டும். எட்டாதே என்று ஒரு ஏமாளி சொல்வானானால் எட்டும் என்று வைராக்கிய தீரன் சொல்லுவான். நெற்றிக்கண் திறப்பது என்பது தற்கலத்தில் உள்ள வெல்டிங் வேலையைப் போன்று அறுக்கவோ, ஒட்ட வைக்கவோ முடியாததைப் போல் ஒப்பிடப்படுகிறது.

ஒரு அரசனுக்கு ஞானமானது கிடைத்துவிட்டால் அது உலகத்துக்கே பயன்படுகிறது. ஒரு யுத்தத் தலைவனுக்குக் கிடைத்தாலோ அது வேகத்தோடு பரவுகிறது. ஒரு குடும்பத்தலைவன் பெற்றகாலத்து ஒழுக்கத்தையும் குடும்பவாழ்க்கையில் ஒரு நிம்மதியையும் கொடுக்கிறது.

மனிதன் ஆண்டவனை அறியவோ, ஆண்டவனாகப் போவதோ நெற்றிக்கண் உணர்வால் பெறப்படும். உடம்பில் பல வியாதியின் காரணமாக ஏற்படும் வலியை நெற்றிக்கண்ணில் நாட்டம் வைத்து அந்த உணர்ச்சியோடு உறங்கிவிட வியாதியனைத்தும் தீரும்.

	"கடத்திலோர் இடத்தில் கறந்த ஞானப்பாலை
		கனலான மூலக்கனலால் மூட்டி மூட்டிக்
	கம்ப நுனிவழியாய்க் கண்மூக்கு மத்தியில் ஊட்டி ஊட்டிக்
		கருத்திற்கிசைந்த சுவையைக் கபாலம் ஏற்றி ஏற்றித்
	தன்மணிபோல ரசமணி திரள திரளக்
		கண்ணுக்கு தெரியாத திரை ஆறும் தன்
	திறமையால் திறக்கத் திறக்கத்
		தன் காரணத்தைத் தானே தெரியலாமே."


	"என் சொல்லை நெஞ்சால் கேளுங்கள், மிக தைரியசாலிகள் ஆவீர்கள்
	நெற்றியால் கேளுங்கள், மரணபயத்தை நீக்கிக் கொள்வீர்கள்
	தலையால் கேளுங்கள், அறிவாய் பிரகாசிப்பீர்கள்
	துரித நிதானத்தோடு நிதானியுங்கள், உங்களில் நீங்கள் எல்லாம் அறிவீர்கள்."